Overblog Follow this blog
Edit post Administration Create my blog

கடல்சார் பாதுகாப்பு இந்தியா - அமெரிக்கா - ஜப்பான் பேச்சு!

நியூயார்க்: தெற்கு சீன கடல் உட்பட, இந்திய - பசிபிக் பிராந்திய கடற்பகுதியின் பாதுகாப்பில், இணைந்து செயல்படுவது என, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.இந்த மூன்று நாடுகள் பங்கேற்ற, கடல்சார் பாதுகாப்பு தொடர்பான முதல் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்கள், ஜான் கெர்ரி, புமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து, வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தெற்கு சீன கடல் உள்ளிட்ட, இந்திய - பசுபிக் கடல் பகுதியில், சுதந்திரமாக கப்பல் போக்குவரத்தை மேற்கொள்வது, கடல்சார் பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் இணைந்து செயல்பட, மூன்று நாடுகளும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஆசிய பசுபிக் மற்றும் இந்து மாக்கடல் பகுதி, இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, வணிகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு உயிர்நாடியாக விளங்குகிறது. அதனால், 'ஆசியான்' அமைப்பை சேர்ந்த நாடுகளுடன் மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகள் உடனும், தொடர்பை வலுப்படுத்துவதே, இந்தியாவின் முக்கிய நோக்கம்.அதனால், அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் ஆதரவுடன், 'அபெக்' எனப்படும், ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பில் உறுப்பினராக, இந்தியா தீவிரமாக உள்ளது.ஆசிய - பசிபிக் கடற்பிராந்தியத்தில் அமைதி, வளம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலை நிறுத்த, இணைந்து செயல் படுவதென, மூன்று நாடுகளின் முதல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சீனா எதிர்ப்பு

பசுபிக் பெருங்கடலில், ஒரு பகுதியாக தெற்கு சீன கடல் உள்ளது. தெற்காசிய நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு அவசியமாக உள்ள இந்த கடல் பகுதியில், எண்ணெய், எரிவாயு வளங்கள் உள்ளன. இவற்றை குறி வைத்து, தெற்கு சீன கடல் பகுதி முழுவதையும், சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்காக, சிறிய பாறை திட்டுகளைக் கூட, செயற்கை தீவாக மாற்றி, அதை சீனா, ராணுவ தளமாக பயன்படுத்தி வருகிறது. அதே சமயம், இக்கடற்பகுதிக்கு, தைவான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகளும், உரிமை கோரி வருகின்றன. தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த, வியட்நாம் நாட்டின் ஹனோய் கடலோரம், இந்தியாவின் ஓ.என்.ஜி.சி., நிறுவனம் எண்ணெய் துரப்பன வேலையில் ஈடுபட்டுள்ளது. இப்பகுதி, தனது தெற்கு சீன கடல் எல்லையில் உள்ளதாக கூறி, அதற்கு, சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Share this post

Repost 0
To be informed of the latest articles, subscribe: