வரிசை கட்டும் விஜய் சேதுபதி படங்கள்!
80களில் நடிகர் மோகனை வெள்ளிவிழா நாயகன் என்பார்கள். அதற்கு இன்னொரு இன்னொரு அர்த்தமும் உண்டு. மோகனின் படங்கள் வாரவாரம் தவறாமல் வெளிவரும் என்கிற அளவுக்கு நிறைய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அதேபோல வெள்ளிவிழா நாயகன் என்கிற பெயரைச் சமீபத்தில் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.
சிலவாரங்களுக்கு முன்புதான் தர்மதுரை வெளிவந்தது. எல்லோரும் அதைப் பார்த்து முடிப்பதற்குள் ஆண்டவன் கட்டளை சென்ற வாரம் வெளியாகிவிட்டது! சரி, இந்தப் படம் பார்ப்பதற்காவது இடைவெளி விட்டாரா! இதோ, அடுத்த வாரம் றெக்க வெளியாகிறது. பாவம், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மூச்சு முட்டுகிறது.
இந்த வருடம் மட்டும் காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என விஜய் சேதுபதியின் 5 படங்கள் வெளிவந்துள்ளன. (கடந்த வாரம் வெளியான தொடரி, 2016-ல் வெளியாகிய தனுஷின் முதல் படம் என்பது கூடுதல் தகவலுக்கு!)
றெக்க படத்தோடு இந்த வருட கோட்டா முடிந்துவிடவில்லை. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. அதன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. அதுவும் ஒருவேளை இந்த வருடமே வெளியாகலாம். இதற்கு அடுத்ததாக ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம், புஷ்கர் – காயத்ரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.