காஷ்மீரில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்கள் மாஜிஸ்திரேட் முன்னிலையில் அடக்கம் செய்யப்படும்!
கொரோனா தொற்று காரணமாக ஜம்மு காஷ்மீரில் கொல்லப்படும் பயங்கரவாதிகளின் உடல்களை அவர்களது குடும்பங்களுக்கு ஒப்படைக்க வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீர் காவல்துறை முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் கல்லறைகளில் குடும்ப உறுப்பினர்களின் முன்னிலையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடலை அதிகாரிகள் அடக்கம் செய்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் சடலங்களை ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மத்திய காஷ்மீரில் உள்ள நியமிக்கப்பட்ட கல்லறைகளில் புதைக்கத் தொடங்கியுள்ளனர். பொதுக் கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக அவர்களின் சொந்த கிராமங்களில் அடக்கம் செய்யப்படுவதில்லை. செய்தி குறிப்புகளின்படி, உள்ளூர் அதிகாரிகளால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்.
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "மரியாதைக்குரிய விதத்தில், அவர்களது குடும்பங்கள் முன்னிலையிலும், மதத் தேவைகளுக்கு முழுமையாக இணங்கவும் அடக்கம் செய்ய ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த டி.என்.ஏ மாதிரிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன", என்று கூறியுள்ளார்.
அல்கொய்தாவின் காஷ்மீர் பிராந்தியத்தைச் சேர்ந்த அன்சார் கஸ்வத்துல் ஹிந்தைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகளின் உடல்கள் ஏப்ரல் 22 அன்று அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத தொடக்கத்தில், சோபூரில் கொல்லப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி சஜ்ஜாத் நவாப் தாரின் இறுதிச்சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கூடி, ஊரடங்கு விதிமுறைகளை மீறியுள்ளனர். இந்த சம்பவம் காஷ்மீரில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க வழிவகுத்தது.