சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலத்தில் சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தியாராய நகரில் உள்ள பா.ஜ., தலைமையகம் கமலாலயத்தில் நள்ளிரவு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக போலீசார் தேனாம் பேட்டையை சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் பாஜக அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை. கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கேள்விப்பட்டு பா.ஜ.க கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தொண்டர்கள் கண்டன முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து போலிஸ் விசாரணையில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில், “ பாஜக தலைமையகம் கமலாலயத்தில் 3 பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளன, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளது. தலைநகரிலேயே பெட்ரோல் குண்டு கலாச்சாரம், நீங்கள் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் இதுதானா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு உள்ளது என கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு சாட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.