சென்னை: பெருந்தொற்றின் போது முன்கள பணியில் ஈடுபட்டு, தொடர்ந்து மக்களுக்காக சேவையாற்றியவர்கள், தமிழக டாக்டர்கள். தன்னலமற்ற சேவை செய்யும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆளுங்கட்சி பதிலளிக்கும் வரை, தமிழக பா.ஜ., ஓயாது. வரும் 10ம் தேதி, ஆளும் தி.மு.க., அரசை எதிர்த்து நடத்தும் டாக்டர்களின் போராட்டத்திற்கு, தமிழக பா.ஜ.,வின் ஆதரவு உண்டு.
கூடுதல் நிதி ஒதுக்கினால் தான், ரயில்வே கட்டமைப்பில் தமிழகம் தன்னிறைவு பெற முடியும்.தினமும் ஒரு அறிக்கை வெளியிட்டு, இருப்பைக் காட்டிக்கிறீங்க... இதைத் தாண்டி உங்களால் ஒன்றும் செய்ய முடியாதே!
அ.தி.மு.க.,வின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, 18 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தியவர் எம்.ஜி.ஆர்., அதை, 69 சதவீதமாக உயர்த்தியவர் ஜெயலலிதா.
சமூக நீதிக்காக, ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாத தி.மு.க., ஸ்டாலின், சமூக நீதி கூட்டமைப்பு துவக்கி, 38 தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். உங்க கட்சியில், பன்னீர்செல்வத்துக்கு மட்டும் அழைப்பு குடுத்தார்ன்னு, உங்களுக்கு கோபமோ!
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை: தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் கைப்பற்றப்படுவதும், மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு விடுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் கூடாது. இது குறித்து மத்திய அரசுடன் முதல்வர் கலந்து ஆலோசித்து, தேவையான அழுத்தம் கொடுத்து, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இந்த விவகாரத்துல, முக்கிய பிரச்னை என்னன்னு உங்களுக்கே தெரியும். யாரையும் சமாதானப்படுத்தவோ, உங்களை நிலைநிறுத்திக்கவோ, இப்படி ஒரு அறிக்கையைக் கொடுக்காதீர்கள். முதல்வராக இருந்தவர் நீங்கள்... ஆவன செய்து,நிரந்தர தீர்வு கொடுத்திருக்கலாமே!