புதுச்சேரி:''தமிழக கவர்னர், 'நீட்' விலகல் மசோதாவை திருப்பி அனுப்பியதில் தவறேதும் இல்லை,'' என, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்று, பிற மாநிலங்களை விட வெகுவாக குறைந்துள்ளது. மக்கள், கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி பாதுகாப்பாக உள்ளனர்.பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் பாதுகாப்பிற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு விலகல் மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பியது தவறு என்பது சரியல்ல. மசோதாவை திருப்பி அனுப்ப, கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. கவர்னர் சில கருத்துகளை கூறியுள்ளார். அதன் மீது, சபாநாயகர் திரும்பவும் எந்த முடிவும் எடுக்கலாம்.
அதே நேரத்தில், கவர்னர் என்றால், ஆளுங்கட்சிக்கு எதிராக இருப்பர் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது; அது தவறு. கவர்னர்கள் அனைவரும் திறமைசாலிகள். அனைவரும், பிரச்னைகளை அணுக தெரிந்தவர்கள். அவர்களுக்குள்ள உரிமையை தான் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.