ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை திருத்தி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தாக்கல்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை திருத்தி ஒரு வாரத்திற்குள் மீண்டும் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த மனுவை மஹஜன எக்ஸத் பெரமுனவின் சோமவீர சந்ரசிறி தாக்கல் செய்திருந்தார். பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் , உயர்நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு மீண்டும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று (01) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதால் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா தெரிவித்தார்.
எனினும் மனுவுடன் தொடர்புடைய ஒரு சில முக்கிய ஆவணங்கள் இல்லை எனவும் பிரதிவாதிகளுக்கு இது தொடர்பிலான ஆவணங்கள் கிடைக்கவில்லையெனவும், அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள ஆவணக் கோவைகளிலும் அநேகமான ஆவணங்கள் இல்லாமையினால் மனுவை இன்று பரிசீலிக்க முடியாது என பிரதம நீதியரசர் இதன்போது தெரிவித்தார். இந்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை தாமும் உணர்வதாக இதன்போது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் மனுவில் திருத்தம் மேற்கொண்டு மீளத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் 10 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
பாகிஸ்தானை தாக்க நினைத்த இந்திரா: சி.ஐ.ஏ., இணையதளத்தில் புது தகவல்!
அண்டை நாடான பாகிஸ்தான், அணு ஆயுத தொழில்நுட்பத்தை பெற்று அந்த துறையில் வளர்ந்து வருவதை அறிந்த அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா, பாகிஸ்தானின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில், அந்நாட்டை தாக்க நினைத்தார்' என, அமெரிக்க உளவு அமைப்பான, சி.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க உளவு அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அணு ஆயுத தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து வந்த பாகிஸ்தான், அமெரிக்காவிடமிருந்து, 'எப் - 16' ரக போர் விமானங்களை வாங்குவதை அறிந்ததும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அது மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும் என, இந்திய பிரதமர் இந்திரா கருதினார்.
அதையடுத்து, 1981ல், பாகிஸ்தானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி அழிக்க நினைத்தார். எனினும், அந்த விவகாரத்தில் உறுதியான முடிவு எதையும் அவர் எடுக்கவில்லை. அதுபோல, பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை நடத்த உள்ளதை அறிந்ததும், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, இந்தியா அணுகுண்டு சோதனை நடத்த வேண்டும் என, விஞ்ஞானிகளுக்கு, இந்திரா உத்தரவிட்டார்.தார் பாலைவனத்தில் சோதனை நடத்த முடிவாகி, அதற்காக மிகப் பெரிய பள்ளம் தோண்டும் பணியும் துவங்கியது.
பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் போட்டியாக, இந்தியாவும் அணு ஆயுதங்களை குவிக்க வேண்டும் என, ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், இந்திராவின் முயற்சிக்கு, அப்போதைய இந்திய தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இதுவரை பாகிஸ்தானுடன் நான்கு முறை, சீனாவுடன் ஒரு முறை போரை சந்தித்து உள்ளது. எனினும், எந்த நாட்டுடனும் தானாக முன்வந்து போரில் இந்தியா ஈடுபட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் இலவச அஞ்சல் வசதி
தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட முத்திரை இலவச அஞ்சல் வசதி மீண்டும் இன்று முதல் வழங்கப்படவுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டி.எம்.பி.ஆர். அபயரத்ன தெரிவித்தார். 2015.06.26ஆம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியும் இரத்துச்செய்யப்பட்டிருந்தது. அதன்படி சகல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தமது கடமையின் நிமித்தம் கடிதம் அனுப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த விசேட முத்திரையை பாவித்து கடிதம் அனுப்பும் வரப்பிரசாதம் நிறுத்தப்பட்டிருந்தது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்ய்பபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் இலவச அஞ்சல் வசதியை மீண்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சகல அஞ்சல் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மலேசியாவின் அழிவுக்கு ஒருபோதும் துணை நிற்க மாட்டேன்: மலேசிய பிரதமர் பதவி விலக மறுப்பு!(photos)
மலேசியாவின் அழிவுக்கு ஒருபோதும் துணை நிற்க மாட்டேன்,'' என, அந்நாட்டு பிரதமர் நஜீப் ரசாக் தெரிவித்துள்ளார்.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில், பிரதமர் நஜீப் ரசாக் மீது, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. அவர் பதவி விலக வலியுறுத்தி, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'பெர்சி' என்ற சமூக அமைப்பு, நேற்று முன்தினம், 36 மணி நேர போராட்டம் நடத்தியது. இந்நிலையில் நேற்று, மலேசியாவின், 58வது சுதந்திர தின விழாவையொட்டி, நஜீப் ரசாக், 'டிவி'யில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மலேசியா, பல தலைவர்களின் தியாகத்தில் உருவானது; நம் முன்னோர்கள், மக்கள், அமைதியுடன், சுதந்திரமாக வாழ, உயிர் தியாகம் செய்துள்ளனர்.
அப்படி பாடுபட்டு உருவாக்கிய தேசத்தை, உள்நாட்டு சக்திகளோ அல்லது அன்னியரோ சுலபமாக நுழைந்து, அழிக்க விட மாட்டோம். நம்மிடம் ஒற்றுமை இல்லையென்றால், எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது. போராட்டத்தால், பொது அமைதி சீர்குலைந்தது; அதனால், பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டனர். ஜனநாயக நாட்டில், கருத்துகளை வெளியிட, போராட்டம் சரியான வழி அல்ல. மக்கள் அமைதி காக்க வேண்டும். நான் பதவி விலக மாட்டேன்.
அரசின் செயல்பாடுகளை, மக்கள், ஓட்டுகள் மூலம் தீர்மானிக்கட்டும். மலேசியாவின் கரன்சி மதிப்பு குறைந்துள்ளதால், 'நாடு திவாலாகி விடும்' என, உள்நோக்கத்துடன் சிலர் பரப்பும் வதந்தியை நம்ப வேண்டாம். இந்த அரசு, சவாலை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வழக்கமாக, மலேசியா 'டிவி'யில், பிரதமரின் பதிவு செய்யப்பட்ட சுதந்திர தின உரை தான் ஒளிபரப்பாகும்; ஆனால், நேற்று, நஜீப் ரசாக் நேரிடையாக, 'டிவி'யில் உரையாற்றினார்.
புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர் கே.பிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை : கைவிரித்தார் சட்டமா அதிபர்!
புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்களுள் ஒருவரும், சர்வதேச ஆயுதக் கொள்வனவாளருமான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென, மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். கே.பி தொடர்பான வழக்கு, இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் இதனைத் தெரிவித்தார்.
இதனையடுத்து, கே.பி தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கே.பிக்கு எதிராக 193 குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகக் கூறி, அவரைக் கைதுசெய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்தால் கடந்த ஜனவரி மாதம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு சட்டமா அதிபரின் விளக்கத்தை நீதிமன்றம் கோரியிருந்த நிலையில், இத்தனை மாதங்களும் சட்டமா அதிபர் திணைக்களம் அதுகுறித்து நீதிமன்றத்திற்கு விளக்கமளிக்கவில்லை.
கே.பி தொடர்பான வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் மூடி மறைப்பதாகவும், அவரை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் இன்று நீதிமன்றிற்கு இவ்வாறு விளக்கமளித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்பட்ட கே.பி, மஹிந்தவின் தேர்மல் பிரசார பணிகளுக்காக மில்லியன் கணக்கில் பணம் வழங்கியதாகவும் குற்றஞ்சுமத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் கே.பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக கருணா கூறியதை சரத் பொன்சேகா நிராகரிப்பு!
புலிகளின் தலைவர் பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். பிரபாகரனின் தலையில் வீழ்ந்த காயத்தை பார்க்கும்போது அவருடைய ஒருபுற மண்டையோடு வெளியேறியிருந்தது. அவர், தமக்கு தாமே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருந்தால், ரவையானது ஒருமுனையில் இருந்து மறுபக்கத்துக்கு வந்திருக்கும். ஆனால் அது இடம்பெறவில்லை. எனவே மோட்டார் குண்டு ஒன்றே அவரின் தலையில் தாக்கியிருக்க வேண்டும் என்று சரத் பொன்சேகா, இந்திய நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் மரணத்தின் பின்னர் பொலிஸார் மரண விசாரணையை நடத்தினர். மரபணு பரிசோதனையும் நடத்தப்பட்டது என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் மனைவி மதிவதணியும் மகன் துவாரகாவும் ஷெல் வீச்சில் கொல்லப்பட்டதாக கருணா கூறியுள்ளமை குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா, அது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட பிரபாகரனின் 12 வயது மகன் பாலசந்திரனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் தகவல்கள் இல்லை என்று சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவராக யாரை வேண்டும் என்றாலும் நியமித்து கொள்ளவும் : மைத்திரி
நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் தனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றில் எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்வது நாடாளுமன்றத்திற்கு உரிய ஒரு விடயமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் கருத்திற்கமைய நாடாளுமன்றத்திற்கு பொருத்தமான எதிர்க்கட்சி தலைவரை நியமித்துக் கொள்வதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார்!
தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் இம்முறை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தி்ற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தயாசிறி ஜயசேகரவுக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்வு குருணாகல் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பெற்றார்.
ஜனாதிபதி கூட்டணியின் தலைவர்களுடன் கலந்துரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள உள்ளார். அதற்கமைய இன்று காலை இக் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து கட்சி தலைவர்களுக்குக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச நேற்று குறிப்பிட்டிருந்தார். இக் கலந்துரையாடலில் தேசிய சுதந்திர முன்னணி கலந்துகொள்ளவுள்ள நிலையில் தங்கள் கருத்தை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க எதிர்பார்ப்பதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாக்கவுள்ள தேசிய அரசாங்கத்திற்கான இணக்கப்பாடு தொடர்பில் இக் கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.