எகிப்தில் இருந்து கிளம்பி சென்றபோது பயங்கரம் விமானம் வெடித்து 224 பேர் பல!
* ரஷ்ய விமானத்தை வீழ்த்தியதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஒப்புதல்
* தொழில்நுட்பக் கோளாறு காரணம் என எகிப்து மறுப்பு
கெய்ரோ: 224 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் மலையின் உச்சியில் மோதி வெடித்து சிதறியது. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்துக்கு 7 ஊழியர்கள் மற்றும் 217 பயணிகளுடன் ரஷ்ய விமானம் ஒன்று நேற்று காலை புறப்பட்டுச் சென்றது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 23வது நிமிடத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய விமானம் மத்திய சினாய் பகுதியில் மலை உச்சியில் மோதி வெடித்து சிதறியதாக எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கூறினார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என பாதுகாப்பு மற்றும் விமான போக்குவரத்து அதிகாரிகளின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடித்து சிதறிய விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் கருப்பு பெட்டி, வடக்கு சினாயின் அல்அரிஸ் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்து விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் வெடித்து சிதறிய இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு ஆம்பூலன்ஸ்கள் விரைந்துள்ளன. இதனிடையே, எகிப்து பிரதமர் ஷெரீப் இஸ்மாயில் அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, விமான விபத்து மற்றும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மீட்பு குழுவினர் மற்றும் பாதுகாப்பு படையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ரஷ்யாவின் கோகலிமாவியா நிறுவனத்துக்கு சொந்தமானது. விமானத்தில் சென்ற 217 பேரில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் என்றும், இதில் 17 பேர் சிறுவர் என்றும் விமானத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, விமானம் விபத்துக்குள்ளான பகுதி ஐஎஸ்் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்கள் விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என்ற அச்சமும் எழுந்தது. ஆனால், எகிப்து அரசு இந்த தகவலை மறுத்துள்ளது. தொழில்நுட்ப ேகாளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று எகிப்து பிரதமரும் கூறியுள்ளார். வீழ்த்தியது நாங்கள்தான் ஐஎஸ் தீவிரவாதிகள் அறிவிப்பு ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது, தாங்கள்தான் என்று ஐஎஸ் தீவிரவாதிகள் கூஹறியுள்ளனர். இதுகுறித்து ஐஎஸ் தீவிரவாதிகள் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிபிரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியது நாங்கள்தான். சிரியாவில் ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்து இந்த தாக்குதலை நடத்தினோம்பீபீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக எகிப்து அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம்!
பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம் தீட்டுகின்றனர். எம்மையும் எமது இனத்தையும் பழிதீர்க்க அரசாங்கமே துணை போகின்றது என மஹிந்த ஆதரவு அணியினர் தெரிவித்தனர். மஹிந்த ஆதரவு அணியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக் ஷவை சர்வாதிகாரியாகவும், ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சியை எமது அரசாங்கம் மேற்கொள்வதாகவும் விமர்சித்த அணியினர் இப்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். ஆனால் எம்மை விமர்சித்ததை விடவும் பலமடங்கு அதிகமான வகையில் சர்வாதிகார போக்கை இந்த அரசாங்கம் கையாள்கின்றது. அதேபோல் மஹிந்தவால் செய்ய முடியாததை நாம் செய்து காட்டுவோம் என எமக்கே இவர்கள் சவால் விடுத்தனர். ஆனால் நாம் செய்யாத ஒரு விடயத்தை மட்டுமே இவர்களால் செய்து காட்ட முடிந்துள்ளது. அதாவது நாம் தடுத்த தமிழீழத்துக்கான கொள்கையை பலப்படுத்தி பிரிவினைவாதிகளின் கைகளில் நாட்டை கொடுத்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் தேவைக்கேற்ப நாட்டில் ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர். இதை நாம் தடுத்து மக்களை எமது பக்கம் பலப்படுத்த முயற்சிக்கும் சந்தரப்பங்களில் எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எமது ஜனாநயக செயற்பாடுகளை தடுக்கின்றனர். பாராளுமன்றத்தில் எமது தரப்பின் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றது. பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி எம்மை கைதுசெய்ய திட்டம் தீட்டுகின்றனர். எம்மையும் எமது இனத்தையும் பழிதீர்க்க அரசாங்கமே துணை போகின்றது. ஒருபுறம் புலம்பெயர் புலிகளை பலப்படுத்தி தமிழீழத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படும் அதேவேளை மேற்கத்தேய நாடுகளின் அடிமைகளாக எம்மை மாற்றியமைத்து எமது பொருளாதார கொள்கைகளையும், வளங்களையும் அவர்களிடம் விற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆகவே இந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் ஜனநாயக நாடாக எமது நாட்டை கட்டியெழுப்பும் போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவிக்கையில்,
நாட்டின் விடுதலையை கருத்தில்கொண்டு நாம் செயற்பட்டு வருகின்றோம் . யுத்தத்தின் போதும் நாட்டின் விடுதலையை கருத்தில்கொண்டே நாம் செயற்பட்டோம். அப்போதும் எம்மை ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கம் என விமர்சித்தனர். ஆனால் நாம் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாது நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்தோம்.இப்போதும் தேசிய விடுதலையை வென்றெடுக்கும் ஒரே நோக்கத்தில் நாம் போராடி வருகின்றோம். ஆனால் சிறைச்சாலை பயத்தை காட்டி எம்மை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் சிறைச்சாலைகளை காட்டி எமது விடுதலைப்போராட்டத்தை தடுக்க முடியாது. வெள்ளையர்களின் கொள்கையையும் அவர்களது திட்டத்தையும் எமது நாட்டில் நடைமுறைப்படுத்த இவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் தோற்கடிக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஒரு இனத்தின் நலன்களை மட்டுமே கவனத்தில்கொண்டு செயற்படுகின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளையும் அவர்களின் நிகழ்ச்சிநிரல்களையும் மட்டுமே முன்னெடுத்து செல்கின்றனர் எனக் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறுகையில், இன்று பாராளுமன்றத்தில் உண்மையான எதிர்க்கட்சி என ஒன்று இல்லாது போய்விட்டது. நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லவும், அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தவும் அரசாங்கம் விரும்பாத காரணத்தினால்
இன்று தமது தேவைக்கு ஏற்ப எதிர்க்கட்சியை அமைத்துள்ளனர். தமிழீழத்தை உருவாக்கும் நோக்கத்தில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்துடைப்பு எதிர்க்கட்சியாக நியமித்துள்ளனர். அதேபோல் எம்மை விமர்சிக்கவும் எமக்கு எதிராக கருத்துகளை பரப்பவும் மக்கள் விடுதலை முன்னணியை விலைகொடுத்து வாங்கியுள்ளனர். அதையும் மீறி நாம் செயற்பட ஆரம்பிக்கும்போது எம்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எமது வாய்களை மூடிவிடுகின்றனர். அதேபோல் நாட்டில் பொருளாதாரமும், விவசாய நடவடிக்கைகளும் முழுமையாக வீழ்ச்சிகண்டுவிட்டன. கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளது. ஆகவே இப்போதாவது மக்கள் நிலைமைகளை விளங்கிக்கொள வேண்டும் என்றார்.
தமிழக மீனவர் பிரச்னையில் தமிழக அரசின் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை!
தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக அரசு விடுக்கும் கோரிக்கையை கவனத்தில் கொள்ள தேவையில்லை என இலங்கை மீன்வள அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் வளங்களை கொள்ளையிடுவதை விட, அவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களே மிகவும் ஆபத்தானவை என அவர் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் கடல் அரிப்பு உள்ளிட்ட இழப்புகளுக்கு இந்தியாவிடம் இழப்பீடு கோரப்படும் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் ஒரு தேசத்தின் ஜனாதிபதியாக தேர்வு!
மத்திய அமெரிக்காவில் உள்ள கௌதமாலாவின் புதிய ஜனாதிபதியாக நகைச்சுவை நடிகர் ஜிம்மி மோரேல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே இருந்த ஜனாதிபதி மீது ஊழல் புகார் கடுமையாக எழுந்தது. ஊழல் மற்றும் லஞ்ச லாவணியத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து, அந்நாட்டின் நகைச்சுவை நடிகர் ஜிம்மி மோரேல்ஸ் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிராக பேசத்துவங்கினார். இதனால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். தொடர்ந்து லஞ்சம் மற்றும் திருட்டு இல்லாத கௌதமாலாவே எனது நோக்கம் என பேசத் துவங்கினார். இந்த கருத்திற்கும் மக்கள் மத்தியில் ஆதரவு குவிந்தது. மக்கள் போராட்டம் மேலும்
தீவிரமடைந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜிம்மி மோரேல்ஸ், லஞ்சம் மற்றும் திருட்டு இல்லாத கௌதமாலா என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தேர்தலில் 72 சதவிகிதம் வாக்கு பெற்று வெற்றிபெற்றார். எந்த அரசியல் முன் அனுபவம் இல்லாமல் மக்களை கவ்விப்பிடிக்கும் பிரச்சனையை கையில் எடுத்து லாவகமாக கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.
மாமிச பிரியர்களுக்கு எச்சரிக்கை : பதப்படுத்த இறைச்சியால் புற்றுநோய் வருகிறதாம்!
மாமிச பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய ஆய்வறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆம், பதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்று நோயை ஏற்படுத்துகிறது, என உலக சுகாதார் அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் அதிகரிப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இறைச்சியிலும் புற்றுநோயை தோற்றுவிக்கும் காரணிகள் இருப்பதாகவும், ஆனால் அதற்கான உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நான் டுபாய் செல்லவில்லை மறுக்குறார் விமல் வீரவன்ச!
டுபாயில் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவினால் பேணப்பட்டு வரும் வங்கிக்கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தூது சொல்வதற்காகவே தாம் டுபாய்க்கு செல்ல முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மறுத்துள்ளார். இரண்டு கடவுச்சீட்டுக்களை கொண்டிருந்த குற்றச்சாட்டின் பேரில் வீரவன்ச அண்மையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் தம்மைப்பற்றி பொய்யான குற்றச்சாட்டுக்களை ஜேவிபியினரே பரப்புவதாக வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். ஜே.வி.பியின் தலைமைத்துவம் குழப்பிவிட்டு அதில் மீன்பிடிக்க முனைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜேவிபியினால் நடத்தப்படும் இணையத்தளம் ஒன்றில் வீரவன்ச, ஐரோப்பியா சென்று அங்கிருந்து டுபாய்க்கு செல்ல முனைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் டுபாயின் வங்கியில் வைத்திருப்பதாக கூறப்படும் 500 மில்லியன் டொலர்கள் தொடர்பில் தூது ஒன்றை அவர் எடுத்துச்சென்றதாகவும் ஜே.வி.பியின் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் தமது அரசியல் வாழ்க்கையை நாசப்படுத்த ஜே.வி.பி முனைவதாக வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
தேர்தல் களத்தில் மஹிந்த தரப்பு தனிக்கூட்டணியில்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச்சில் நடத்துவதற்கு அரசு உத்தேசித்துள்ள நிலையில், அதை எதிர்கொள்வதற்குரிய தயார்ப்படுத்தல் நடவடிக்கைகளில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. பலமான வேட்பாளர் அணியை தெரிவு செய்தல், பிரசாரப் பொறிமுறை, கூட்டணி அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் தற்போதிலிருந்தே ஆரம்பமாகியுள்ளன. இதன்படி தமது கட்சியின் உள்ளூராட்சி செயற்பாட்டாளர்களை ஐக்கிய தேசியக் கட்சி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது. அடுத்த வாரத்தினுள் இதற்கான சந்திப்பு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் என அறியமுடிகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் விவகாரத்தைக் கையாள்வதற்காக அக்கட்சி தனிக்குழுவொன்றையும் அமைக்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலுக்குரிய பூர்வாங்கப் பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்குரிய பொறுப்புகள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தின்போதும் தேர்தல் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள மஹிந்த ஆதரவு அணியினர், தனிக் கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்குவதற்கான பேச்சுகளை ஆரம்பித்துள்ளன. இதன் முதற்கட்ட சந்திப்பு முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது. அத்துடன், ஜே.வி.பியும் தேர்தல் தொடர்பில் தனது முழுப்பார்வையையும் செலுத்தியுள்ளது. தமிழ் முற்போக்குக் கூட்டணியும் தேர்தல் சம்பந்தமான ஆரம்பகட்ட நடிவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதா அல்லது தனித்துக் களமிறங்குவதா அல்லது ஒரு சில பகுதிகளில் தனித்தும் ஏனைய பகுதிகளில் கூட்டணியாக களமிறங்குவதா என்பது பற்றி அது ஆலோசனை நடத்தி வருகின்றன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது. கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் அண்மையில் சந்திப்பு நடத்தப்பட்டது. முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் மீது தமது பார்வையை செலுத்தியுள்ளன. இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே இடம்பெறும். எல்லை நிர்ணத்திலுள்ள குறைப்பாடுகள் விரைவில் நிவர்த்தி செய்யப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, உள்ளூராட்சி சபைத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு , ஜனாதிபதியின் புகைப்படங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்வதற்கு இடமளிக்கப்படக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதியிடம் மேற்படி கோரிக்கை விடுத்துள்ளார் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினரான ரஞ்சித் டி சொய்சா. நாடாளுமன்றத் தேர்தலின்போதும், தங்களின் படங்களைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரசாரம் செய்தனர். இதனால் எமக்குப் பாதிப்பு ஏற்பட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, எனது படங்களை நீங்கள் பயன்படுத்த தயங்கியபோது ஐக்கிய தேசியக் கட்சியினர் பயன்படுத்தினர். இதில் யார் பக்கம் தவறிருக்கிறது எனக் கேட்டுள்ளார்.
பிள்ளைகளை உயிரெனப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு
பிள்ளைகளை உயிரெனப் பாதுகாப்போம்’ என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நடைபவனி நிகழ்வானது, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பங்குபற்றுதலுடன் (ஒக்டோபர், 25) இடம்பெற்றது. மேற்படி நிகழ்வானது, தேசத்தின் பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் அவர்களுக்கான நல் எதிர்காலத்தை உருவாக்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்துகொண்டார். இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் “பெற்றோர்கள் குழந்தைகள் பாதுகாக்கும் ஒரு பாரிய பொறுப்புமிக்கவர்கள் எனவும் குழந்தைகள் மீது தவறாமல் கவனம் செலுத்துவது அவர்களின் தலையாய கடமை” எனவும் குறிப்பிட்டார். இந் நடை பவனி நிகழ்வில், இலங்கை பொலிஸார், விமானப்படை உறுப்பினர்கள், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அரசாங்க நிறுவனங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பணி செய்துவரும் பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.
ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் தின கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்
கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலக வளாகத்தில் (ஒக்டோபர்,24) இடம்பெற்ற 70வது ஐக்கிய நாடுகள் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேற்படி நிகழ்வில், பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் பாதுகாப்புச் செயலாளர் திரு. கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2015 ஆண்டானது ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். ஐக்கிய நாடுகள் சபை தனது 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற அதேவேளை இலங்கைக்கான ஐக்கிய நாட்டுக்கிளையானது தனது 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
ஐக்கிய நாடுகள் சபை 1945ம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி நிறுவப்பட்டதுடன் இலங்கையானது 1955ம் ஆண்டு டிசம்பர் 14ம் திகதி அதில் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. இரட்டை ஆண்டு நிறைவுகளைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கிளையும் கூட்டாக இணைந்து "அவ யூஎன் , அபே யூஎன், எங்கள் யூஎன்," எனும் தொணிப் பொருளில் ஊடக மற்றும் தகவல் தொடர்பு பிரச்சாரம் ஒன்றினை ஆரம்பித்து வைத்தது. இவ்விழா ஆரம்பத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் 70 வது ஆண்டு நிறைவையும் இலங்கைக்கான ஐக்கிய நாட்டுக்கிளையின் 60வது ஆண்டு நிறைவையும் நினைவு கூறும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பான புத்தகம் மற்றும் தபால் முத்திரை வெளியீடும் செய்யப்பட்டன. இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கெளரவ. கரு ஜயசூரிய, அமைச்சர்கள், ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் – மிரோஸ்லவ ஜெண்கா (Miroslav Jenca) பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.