பொலிஸார் முகம்கொடுக்கும் வகையில் புதியதிட்டங்கள்!
நாட்டில் இடம்பெறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸார் முகம்கொடுக்கும் வகையில் புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்த வேண்டும் என பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் போராட்டங்கள் இடம்பெறும் வேளைகளில் பொலிஸார் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாகவும் எனவே, அவ்வாறான சூழ்நிலையில் பொலிஸார் செயற்பட கூடிய முறை தொடர்பாக புதியதிட்டங்கள் கொண்டு வருவதன் அவசியத்தை பொலிஸ் மா அதிபரிடம் வலியுறுத்துவதாகவும் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார். எச்.என்.டீ.ஏ மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, காவற்துறையினர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நட்டஈடையும் பெற்றுக் கொடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வாறான சம்பவங்களை அடுத்தே இது குறித்து ஆலோசிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லை!
அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையென, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கைதிகள் குறித்து பலர் பல தகவல்களை வெளியிட்டு வந்தாலும், அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல்வாதிகள் கூறி வருவதைப் போன்று அவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்லர் எனவும், குண்டுகளை வெடிக்கச் செய்து மனித கொலைகளுக்கு உதவிய குற்றவாளிகள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். அவ்வாறானவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே முடியுமென்றும், மாறாக அவர்களை விடுவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில் தான் கடந்த காலத்தில் சிலருக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டதென சுட்டிக்காட்டிய அவர், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களின் பிரகாரம் கைதிகளை விடுதலை செய்வதற்கு யாருக்கும் உரிமையில்லையென பாதுகாப்புச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வ: தொழிற்சங்கங்கள்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நாளை மறுதினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழிற்சங்க நவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச, மித அரச மற்றும் தனியார்த்துறை தொழிற்சங்க ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இந்த ஒன்றியத்தின் இணைப்பாளர் சமன் ரத்னபிரிய இந்த விடயத்தை கூறியுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தை மாலை 6.15 வரையில் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது. அரச பணியாளர்களின் ஓய்வூதிய குறைப்பு, அதிகரிக்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் வேதனம், அடிப்படை வேதனத்துடன் இணைக்கப்படாமை, மனிதவள பணியாளர்களுக்கு நிலையான நியமனம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில் நிதி அமை;சர் ரவிகருணாநாயக்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா ஆகியோரும் பங்குபற்றி இருந்தனர். எனினும் இதன்போது தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எவையும் முன்வைக்க்பபடவில்லை என்று, அரச, மித அரச மற்றும் தனியார்த்துறை தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது. இதன்படி தொடருந்து திணைக்கள தொழிற்சங்கம் எதிர்வரும் 14ம் திகதி நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தை அரம்பிக்க தயாராக இருக்கிறது. தங்களின் பிரச்சினைகளுக்கு 48 மணித்தியாலத்தில் தீர்வு வழங்கப்படாவிட்டால், இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கல்வித் துறை சார்ந்தவர்களும் எதிர்வரும் 15ம் திகதி தொழிற்சங்க போராட்டத்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.