Overblog
Follow this blog Administration + Create my blog
Lankatime   ලංකා වේලාව

மைத்திரிபால டிசம்பர் மாதத்தில் ஈரான் செல்கிறார் !

October 23 2016 , Written by lankatime

மைத்திரிபால  டிசம்பர் மாதத்தில் ஈரான் செல்கிறார் !

இஸ்லாமிய குடியரசுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பர் மாதத்தில் ஈரான் பயணமாகவுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். 

குறித்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பாங்கொங் நகரில் இடம்பெற்ற ஆசிய ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஈரானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இச்சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் மசகு எண்ணெய் வர்த்தகம் போன்ற துறைகளில் இருவர்களுக்கிடையேயும் பரந்துபட்ட கலந்துரையாடல்களும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  தற்போது உமா ஒயா திட்டத்திற்காக ஈரான் அதிகளவிலான நிதி உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

நுவரெலியா பகுதியில் பெண் பொலிஸ் உடையுடன் நடமாடிய ஆண் கைது!

October 23 2016 , Written by lankatime

நுவரெலியா பகுதியில் பெண் பொலிஸ் உடையுடன் நடமாடிய ஆண் கைது!

நுவரெலியா பகுதியில் பெண் பொலிஸ் உடையில் நடமாடிய ஆண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கேகாலை பகுதியை சேர்ந்த லோகநாதன் வினோத்குமார் என கூறப்படுகிறது.

பெண் பொலிஸ் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுவதாக உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டபோது அவர், பெண் பொலிஸ் ஆடை அணிந்த ஆண் ஒருவர் என்பதை அறிந்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அவருக்கு எவ்விதம் பொலிஸ் ஆடை கிடைத்தது எனவும், ஏன் அவர் பெண் வேடத்தில் இருந்தார் என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

வெலிக்கடைச் சிறையில் திஸ்ஸ அத்தநாயக்கவை சந்திப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

October 21 2016 , Written by lankatime

வெலிக்கடைச் சிறையில் திஸ்ஸ அத்தநாயக்கவை சந்திப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவை சந்திப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று சென்றார்.

திஸ்ஸ அத்தநாயக்கவை பார்த்து நலம் விசாரித்த மஹிந்த, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எந்த நேரத்தில்  புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாததால் யுத்தக் காலத்தில் மக்கள் சரியாக உறங்கவில்லை. எந்த நேரத்தில் எப்.சி.ஐ.டி, சி.ஐ.டியினர் வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தெரியாததால் இப்போதும் மக்கள் சரியாக உறங்குவதில்லை. இந்த அரசாங்கத்தின் ஒரே வேலை பழிவாங்குவது மட்டுமே” என்றார்.

Read more

Published from Overblog

October 18 2016 , Written by lankatime

காவல்துறை மா அதிபர் பதவி விலக வேண்டும்: மொஹமட் முசாம்மில்!

காவல்துறை மா அதிபர் பதவி விலக வேண்டும்: மொஹமட் முசாம்மில்!

காவல்துறை மா அதிபர் பதவி விலக வேண்டுமென ஜே.என்.பி கட்சி கோரியுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் லஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு ஆகியனவற்றில் அரசியல் தலையீடுகள் ஏற்படுவதற்கு காவல்துறை மா அதிபரே பொறுப்பு என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்தின் மூலம் இந்த நிறுவனங்கள் அரசியல் நோக்கில் செயற்பட்டு வருகின்றமை அம்லபமாகியுள்ளதாக கட்சியின் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினை பல்வேறு தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தினால் தேசிய காவல்துறை ஆணைக்குழுவில் பயனில்லை என தெரிவித்துள்ள அவர் இந்த நிறுவனங்கள் சுயாதீனமான முறையில் செயற்படவில்லை எனவும் எனவே காவல்துறை மா அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் சீனப் பயணம்: நீதிமன்றம் நாளை முடிவு செய்யும்!

October 2 2016 , Written by lankatime

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவின் சீனப் பயணம்: நீதிமன்றம் நாளை முடிவு செய்யும்!

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதா என்பது குறித்து கொழும்பு நீதிமன்றம் நாளை முடிவு செய்யவுள்ளது. சீன அரசின் அழைப்பின் பேரில்,எதிர்வரும் 5ம் திகதி சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்கு பயணம் மேற்கொள்வதற்கு கோத்தபாய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சுமார் 11.4 பில்லியன் வருமானத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மூலம், இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரையும் பிணையில் செல்வதற்கு அனுமதித்த நீதிவான், இவர்களை வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்து, உத்தரவிட்டார்.

எனினும், சீன அரசின் அழைப்பின் பேரில், பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வரும் 5ம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு கோத்தபாய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவரது சட்டவாளர் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஒக்ரோபர் 3ம் திகதி முடிவு எடுக்கப்படும் என்று நீதிவான் அறிவித்திருந்தார்.

ஒக்ரோபர் 5ம் திகதி தொடக்கம் இரண்டு வாரகாலம் சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கு கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டிருந்தார். ஏழாவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்பு மாநாடு வரும் 10ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஷியாங்சான் யிஹே விடுதியில் நடைபெறவுள்ளது. சுமார் 60 நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், 100ற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு புலமையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்கவே கோத்தாபய ராஜபக்ச சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார். எனினும், கோத்தபாயவின் சீனாவுக்கான பயணத்திட்டம் சாத்தியமாகுமா என்பது நாளையே தெரிய வரும்.

Read more

பாகிஸ்தான் தாக்குதல் எதிரொலி: 6 மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு!

October 1 2016 , Written by lankatime

பாகிஸ்தான் தாக்குதல் எதிரொலி: 6 மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு!

இந்தியாவை பழிவாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால், முன்னெச்சரிக்கையாக 6 மாநிலங்களில் உச்சகட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

காஷ்மீரின் யூரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கியதற்குப் பதிலடியாக, இரண்டு நாட்களுக்கு முன் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் மீது இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்தார். இந்தத் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ள பாகிஸ்தான் எல்லைப்புற மாநிலங்களில் பதில் தாக்குதலோ அல்லது ஐ.எஸ்.ஐ. மூலம் மறைமுகத் தாக்குதலோ நடத்தலாம் எனக் கருதப்படுகிறது.

இதனால் டில்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் உச்சக்கட்டப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யுமாறு அந்த மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து டில்லியில் மாநிலச் சட்டசபை, பார்லிமெண்ட் , விமான நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 6 மாநிலங்களிலும் தொழிற்பேட்டைகள், மக்கள் அதிகம் கூடுமிடங்கள், வரலாற்றுச் சின்னங்கள், அரசு அலுவலகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவராத்திரி திருவிழா தொடக்க நாளான நாளை முதல் இம்மாத இறுதியில் தீபாவளி வரை இந்த கண்காணிப்பு நீடிக்கும் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more

சார்க் மாநாட்டை நடத்தும் சூழல் இல்லை: இலங்கை வெளிவிவகார அமைச்சு!

October 1 2016 , Written by lankatime

சார்க் மாநாட்டை நடத்தும் சூழல் இல்லை: இலங்கை வெளிவிவகார அமைச்சு!

புஷ்டியுடையதாக வெற்றியளிக்க வேண்டுமாயின் சமாதானமும் பாதுகாப்பும் அவசியமாகும். சார்க் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை உருவாக்க இலங்கை தன்னை அர்ப்பணித்துள்ளது.

அதேநேரம் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு சாதகமான அமைதியும் பாதுகாப்பும் நிலைநிறுத்தப்படுமென்கின்ற நம்பிக்கை உண்டு. இலங்கை அனைத்து வடிவிலான பயங்கரவாதச் செயற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்ற அதேவேளை பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்காக தீர்க்கமான தீர்மானமொன்று முன்னெடுக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

வரிசை கட்டும் விஜய் சேதுபதி படங்கள்!

October 1 2016 , Written by lankatime

வரிசை கட்டும் விஜய் சேதுபதி படங்கள்!

80களில் நடிகர் மோகனை வெள்ளிவிழா நாயகன் என்பார்கள். அதற்கு இன்னொரு இன்னொரு அர்த்தமும் உண்டு. மோகனின் படங்கள் வாரவாரம் தவறாமல் வெளிவரும் என்கிற அளவுக்கு நிறைய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். அதேபோல வெள்ளிவிழா நாயகன் என்கிற பெயரைச் சமீபத்தில் பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

சிலவாரங்களுக்கு முன்புதான் தர்மதுரை வெளிவந்தது. எல்லோரும் அதைப் பார்த்து முடிப்பதற்குள் ஆண்டவன் கட்டளை சென்ற வாரம் வெளியாகிவிட்டது! சரி, இந்தப் படம் பார்ப்பதற்காவது இடைவெளி விட்டாரா! இதோ, அடுத்த வாரம் றெக்க வெளியாகிறது. பாவம், விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மூச்சு முட்டுகிறது.

இந்த வருடம் மட்டும் காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என விஜய் சேதுபதியின் 5 படங்கள் வெளிவந்துள்ளன. (கடந்த வாரம் வெளியான தொடரி, 2016-ல் வெளியாகிய தனுஷின் முதல் படம் என்பது கூடுதல் தகவலுக்கு!)

றெக்க படத்தோடு இந்த வருட கோட்டா முடிந்துவிடவில்லை. கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடித்துவருகிறார் விஜய் சேதுபதி. அதன் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது. அதுவும் ஒருவேளை இந்த வருடமே வெளியாகலாம். இதற்கு அடுத்ததாக ரேணிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம், புஷ்கர் – காயத்ரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா கோகுல் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

Read more

வடக்கு எமக்கே உரியது: பொது பலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர்!

October 1 2016 , Written by lankatime

வடக்கு எமக்கே உரியது: பொது பலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர்!

வடக்கு எமக்கே உரியது. இலங்கையில் 2500 வருட ப​ழைமையான இனம் சிங்கள இனமே. அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என பொது பலசேனாவின் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். வவுனியா நகரில் நேற்று பொதுபல சேனா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

'தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது. பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம். மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது. அவை அனைத்தும் முறைகேடானது. இலங்கையை உருவாக்கியது பௌத்தர்களே அவர்களுக்கு எங்கும் விகாரைகள் எழுப்ப உரிமையுள்ளது. இந்த போராட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே. எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும்.

அடுத்து யாழ்ப்பாணத்திலும் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த எமக்கு முடியும். அதற்கான உரிமையும் எமக்கு உண்டு. இன்று கொழும்பில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அவர்களை நாம் அனுசரித்தே வாழ்கின்றோம். சிங்கள மக்கள் நல்லுறவுடன் செயற்படுகிறார்கள். தமிழ் மக்களே பிரிவினையை ஏற்படுத்தப்பார்கிறார்கள். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கொழும்பில் வசித்ததால் அவர் இனங்களுக்கிடையில் நட்புறவை ஏற்படுத்துவார் என எதிர்பார்தோம். ஆனால் அவரும் அவரது கூட்டமைப்பும் இன்றும் புலிகளின் கொள்கையையே கடைப்பிடிக்கிறது எனத் தெரிவித்தார்.

இதேவேளை தமிழர் வாழும் இடத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நீங்கள் செய்யும் போது தமிழர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த மாட்டார்களா? அவர்களுக்கு அதிருப்தி அளிக்காதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது, தமிழர்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள். எமக்கு அதற்கான உரிமை உள்ளது. எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து நாம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றி வடக்கை பெற்றுக்கொள்வோம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

Read more
1 2 > >>