தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டளைப்படியே நடக்கிறது பாதுகாப்பு மாற்றங்கள்: விமல் வீரவன்ச!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டளையின் படியே வட பகுதிக்கான பாதுகாப்பு தீர்மானிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். “எவ்வித பாதுகாப்புக் கணிப்பீடுமின்றி வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு வருகின்றன. காணிகள் மீளக் கையளிக்கப்பட்டு வருகின்றன. புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் சில புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முன்அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் படைமுகாமிற்குள் நுழைகின்றனர். இது இவ்வாறிருக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டளையின் பிரகாரமே வடக்கிற்கான பாதுகாப்பு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அத்துடன் ஆவா குழுவினர் கைது செய்யப்பட்டு உடனடியாகவே பிணையிலும் விடுதலை செய்யப்பட்டனர். இது ஏன் எனப் புரியவில்லை. வடக்கில் கரையோரப் பாதுகாப்பும் பலவீனமாகவே உள்ளது. இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களைச் சூறையாடுகின்றனர். இதற்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் கடற்படையினருக்கு கடிவாளம் போடப்படுகிறது” – என்றார்.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் 50 கோடி ரூபா கேட்கிறார் கம்மன்பில!
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் 50 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் முகநூலில் இட்ட பதிவு ஒன்று தம்மை நேரடியாக அவதூறு செய்வதாக அமைந்துள்ளது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட காலத்தில் ஒரு நாள் கூட நான் சிறைச்சாலை வைத்தியசாலையில் இருக்கவில்லை. 13 நாட்கள் நாள் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட காலத்தில் நான் சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கியிருந்ததாக ரஞ்சன் ராமநாயக்க கூறி முகநூலில் இட்டுள்ள பதிவு முற்றிலும் பொய்யானது. போலிக் குற்றச்சாட்டு சுமத்தி இணையத்தில் பிரச்சாரம் செய்தமைக்காக 50 கோடி ரூபா நட்டஈடு கோரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமைச்சர் பதவிகளை வழங்கி காட்டிக் கொடுத்து விட்டு எவ்வாறு கொள்கைகளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பொறுத்தவரையில் அது பிளவுபட அது ஒரு பெயர் பலகை மாத்திரமல்ல என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தாம் கட்சியை பிளவுபடுத்துவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசில் ராஜபக்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த நாட்குறிப்பு அச்சிட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த அவர் போலியான குற்றச்சாட்டு என்பதால் அதனை வாபஸ் பெற்றுள்ளார்கள் என்று தெரிவித்தார். எனவே அது ஒரு பழிவாங்கல் நடவடிக்கையாகும் என்றும் மஹிந்த தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் ரியுலியுட் பகுதியில் பயங்கர நிலநடுக்கம்: 41 பேர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் உள்ள அசெஹ் நகரில் இன்று (புதன்கிழமை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 41 பேர் பலியாகினர்.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக அமெரிக்க புவியியல் மையம் கூறுகையில், “இந்தோனேசியாவின் ரியுலியுட் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் சரிந்ததில் 41 பேர் பலியாகினர். இதில் குழந்தைகளும் அடங்குவர். நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் மக்கள் பலர் அச்ச நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா அத்துமீறல் : அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப் கண்டனம்!
அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள, டொனால்டு டிரம்ப், தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவ ஆதிக்கத்தை, சீனா விரிவுபடுத்துவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளில் ஒன்றான தைவானின் அதிபர் ட்சாய் இங் வென்னுடன், டொனால்டு டிரம்ப், நேற்று முன்தினம் பேசினார். அப்போது, தன் அண்டை நாடான சீனா, தெற்கு சீன கடல் பகுதியில் ராணுவ ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதாக, இங் வென் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், டிரம்ப் கூறியுள்ளதாவது: தெற்கு சீன கடல் பகுதியில், ராணுவ ஆதிக்கத்தை சீனா விரிவுபடுத்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. பிற நாடுகளுடன் பொருளாதார போட்டியை அதிகரிக்க, தன் கரன்சியின் மதிப்பை, சீனா குறைத்து வருகிறது. இதுகுறித்து, பிற நாடுகளை பற்றி கவலைப்படாமல், தன்னிச்சையாக சீனா நடவடிக்கை எடுப்பது ஏற்க முடியாதது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புலிகளின் அரசியற் பிரிவாக செயற்பட்டு வருகின்ற கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டும்!
புலிகளின் அரசியற் பிரிவாக இன்றும் செயற்பட்டு வருகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்ய வேண்டுமென ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சியான பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
புலிகள் அன்று தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்தின் ஒருபகுதியாகவே கூட்டமைப்பினர் மாவீரர்களை நினைவு கூருகின்றனர். தேசத்தின் துரதிஸ்டத்திற்காக எதிர்கட்சித் தலைவர் பதவி தடை செய்யப்பட வேண்டிய கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, போர்க் காலத்தில் தேர்தலின்போது ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களை அச்சுறுத்தி, கொலை செய்த விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு பாதை அமைத்துக் கொடுத்தது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஈ.பி.டி.பி போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர். தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கைகளில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
அக்காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கிளிநொச்சிக்குச் சென்று புலிகளின் அரசியற் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாடியே அரசியலை செய்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே. ஈழவேந்தனின் வழக்கின்போதும் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அல்லது புலிகளின் உறுப்பினர்களும் ஒன்று என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனவே புலிகளின் அரசியற் பிரிவாகவே கூட்டமைப்பு செயற்படுகிறது என்பதை ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் அறிக்கையும், கனேடிய நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
1945ஆம் ஆண்டில் ஹிட்லர் தோல்வியடைந்த பின்னர் அவரது கட்சியான நாசி கட்சியை ஜேர்மன் தடை செய்தது. 2003ஆம் ஆண்டில் சதாம் உசைனை தோற்கடித்த பின்னர் அவரது பாத் கட்சி தடை செய்யப்பட்டது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தடை செய்யப்பட வேண்டும். அந்தக் கட்சியின் செயற்பாடு இருக்கும்வரை வடக்கில் வேறு கட்சிகளுக்கு தலைதூக்குவது சாத்தியமற்றதாகும். விடுதலைப் புலிகள் தங்களை காப்பாற்றியதற்கான பரிகாரத்திற்காகவே கூட்டமைப்பு இன்று மாவீரர்களை நினைகூர்ந்து வருவதோடு வடக்கில் இனவாதத்தையும் விதைத்து வருகிறது” என்றார்.
ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஓமாந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலில் வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்களின் அஞ்சலிக்கு பின்னர் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பதவியில் இருக்கும் போது உயிரிழந்த மூன்றாவது முதல்வர் ஜெயலலிதா ஆவார்.
ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி காலமானார்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைப் பலன் இன்றி இன்று காலமானார்.
உடல் நலக்குறவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதலில் வெறும் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணி போல் வீட்டிற்கு அனுப்பப்பட்டுவிடுவார் என்றுதான் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பல்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது. பின் நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றிய அறிக்கைகளை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.
மருத்துவர் சிவக்குமார் தலைமையில், கார்டியாலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்தனர். நன்கு குணமடைந்து வந்த நிலையில் அவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நிலைமை மோசமானது. அவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ நிர்வாகமும், மிக மிக மோசமாக உள்ளது என்று லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியலும் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பலனில்லாமல் இன்று மாலை காலமானதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அப்பல்லோ நிர்வாகம் மறுத்தது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்து உயிர்பாதுகாப்பு சிகிச்சைகள் தொடர்வதாகவும், அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. எனினும் உயர் சிகிச்சை எதுவும் பலன் அளிக்காமல் இதயம் செயல் இழந்ததால் அவர் உயிர் பிரிந்ததாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:
* ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ம் தேதி பிறந்தார்.
* ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.
* 10ம் வகுப்பு தேர்வில் தமிழக அளவில் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.
* தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.
* தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.
* 1972ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது
* தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்
அமெரிக்காவில் தீ விபத்து 9 பேர் பலி!
அமெரிக்காவின் ஆக்லாண்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சுமார் 70 பேர் பங்கேற்றுள்ளனர். உள்ளூர் நேரப்படி இரவு 11.30க்கு நிகழ்ச்சி நடந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 9 பேர் பலியானார்கள். 15 பேரை காணவில்லை. 50 பேர் மட்டுமே இருக்கக்கூடிய இடத்தில் அதிகமானோர் கூடியதால் தப்பிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.