சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து மைத்திரியே மஹிந்தவைக் காப்பாற்றினார்? மஹிந்த சமரசிங்க!
மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேசத்தின் அழுத்தங்களிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே காப்பாற்றினார் என்று, அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சர்வதேசத்தால் கிடைக்கப்பெற்ற புகழும் அங்கிகாரமுமே, முன்னாள் ஜனாதிபதியை சர்வதேச அழுத்தத்திலிருந்து பாதுகாத்தது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் செயற்பாடுகள் காரணமாகவே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்படவிருந்த அறிக்கையும் செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சர்வதேச நாடுகள் அனைத்தும், எமது நாட்டின் மீது பொருளாதாரத் தடையை விதிப்பதற்குத் தயாராக இருந்தன. இந்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருடைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர், ஜனாதிபதி தேர்தலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடத்துவதற்குத் தீர்மானித்தார். மஹிந்தவின் சர்வதேசக் கொள்கைகளை எதிர்த்துதான் மக்கள், அவருக்கு வாக்களிக்கவில்லை எனக் கூறமுடியாது. ஆனால், சிறுபான்மையினரைக் கருத்தில் கொள்ளாமை அல்லது அவர்களுக்கான வழிவகைகளைச் செய்துக் கொடுக்காமை மற்றும் அளுத்கமை விவகாரம் போன்ற காரணங்களுக்காகவே, மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.
இந்த நாட்டின் ஜனாதிபதியாக அவர் வருவதை, மக்கள் விரும்பவில்லை என்பதே உண்மை. நாட்டுக்குச் சிறப்பான சேவையாற்றியும் ஒரு தேர்தலில் தோற்றுப்போகக்கூடிய நபராக மஹிந்த ராஜபக்ஷ இருக்கவில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகவே 100 சதவீதம் களத்திலிருந்தேன்’ என்றார்.
எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டை விட்டு தப்பியோடும் ஜோதிடர்!
எதிர்வரும் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிராபத்து உள்ளதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிடர் விஜித ரோஹன விஜயமுனி நாட்டை விட்டு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் ஒரு வெளிநாட்டு தூதரகம் ஊடாக தனக்கு அரசியல் பாதுகாப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்தமையினால் அவர் அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிரிழப்பார் என்று குறித்த சோதிடர் ஆரூடம் கூறிய நிலையில், மீண்டும் அவரது மரணம் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரை தாமதிக்கும் என குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைப்புகள் சில ஆதரவு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாட்டுக்கு முஸ்லிம் அமைப்புகள் சில ஆதரவு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மக்கள் பேரணிக்கு 4 முஸ்லிம் அமைப்புகளின் ஆதரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பேரணிக்கான நிதியுதவி மற்றும் ஆளணி உதவிகளை பெற்றுத்தர குறித்த அமைப்பினர் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன் இந்த பேரணியை வெற்றியடைய செய்வதற்கு தேவையான ஆதரவினை வழங்குவதாக, குறித்த அமைப்பின் பிரதிநிதிகள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
நிலவில் கால் வைத்த கடைசி மனிதர் ஜீன் செர்மான் மரணம்!
நிலவில் கால்வைத்த கடைசி மனிதரான, அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீரர், ஜீன் செர்மான், 82, உடல்நிலை கோளாறால், நேற்று முன்தினம் காலமானார்.நிலவுக்கு கடைசியாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான, 'நாசா' அப்பல்லோ - 17 விண்கலத்தை அனுப்பியது. 'சாலஞ்சர்' என பெயரிடப்பட்ட இந்த விண்கலம், 1972, டிச., 11ல், நிலவை அடைந்தது. அந்த விண்கலத்தில், அமெரிக்காவின் ஜீன் செர்மான், ஹாரிசன்ஜாக் ஸ்குமிட் சென்றனர். டிச., 14ல் பூமிக்கு திரும்பியபோது, கடைசியாக நிலவில் கால் வைத்தது ஜீன் செர்மான். அதன் பின், நாசா அல்லது உலகின் எந்தவெரு நாட்டின் விண்வெளி அமைப்பும், இதுவரை, நிலவுக்கு மனிதர்களை அனுப்பவில்லை. நிலவில் முதலில் கால் வைத்து புகழ்பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங்க் போல, கடைசியாக கால் வைத்த மனிதராக செர்மான் புகழ்பெற்றார். வயோதிகம் மற்றும் உடல்நலக் கோளாறுகளால், நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார்.
அர்ஜுன் எலோசியஸினால் ஆரம்பிக்கப்படுகின்ற ஊடக வலையமைப்புக்கு எதிராக :கோத்தபாய நடவடிக்கை!
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் எலோசியஸினால் ஆரம்பிக்கப்படுகின்ற பாரிய ஊடக வலையமைப்புக்கு எதிராக செயற்பட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நடவடிக்கை எடுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த வலையமைப்புக்கு எதிராக மாற்றாக ஊடக நிறுவனங்கள் பலவற்றை இணைத்துக் கொண்டு வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு கோத்தபாய நடவடிக்கை எடுத்துள்ளார்.
விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அர்ஜுன் எலோசிஸியின் பத்திரிகைக்கு மாற்றாக “தெபஸ” என்ற பத்திரிகை ஒன்றை ஆரம்பிப்பதற்கு கோத்தபாய ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
அதற்கான அனைத்து முகாமைத்துவ நடவடிக்கைகளும் சிங்கள தொலைக்காட்சி சேவையின் தலைவரினால் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
மத்திய வங்கி முறி மோசடி வருமானத்தில் தற்போது இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி சேவை, முக்கிய பத்திரிகை சேவை ஆகியவைகள் அர்ஜுன் எலோசியஸ் தற்போது கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவசியமான எந்த சந்தர்ப்பத்திலும் இணைய ஊடகம் ஊடாக முழுமையான உதவியை வழங்குவதற்கு குறித்த சிங்கள தொலைக்காட்சி சேவை ஆயத்தமாக இருப்பதாக கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய வங்கியின் முறி மோசடி மூலம் பாரியளவு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அர்ஜுன் எலோசியஸிற்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் :நாட்டில் மட்டுமல்ல உலகத்தையும் ஆட்டிப் படைக்க கூடிய நபர்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட உள்ளதாகவும் அவர் நாட்டில் மட்டுமல்ல உலகத்தையும் ஆட்டிப் படைக்க கூடிய நபர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அந்த நபர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் போட்டியிட உள்ளமைக்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் நாட்டில் சிறுபான்மையாக மாறியுள்ள அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் அணி என்பதால், நாட்டில் காணப்படும் அரசாங்கத்திற்கு எதிராக பெரும்பான்மை பலத்தை கொண்ட பொது வேட்பாளரை கூட்டு எதிர்க்கட்சி நிறுத்தும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல்!
ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு எதிர்வரும் சில தினங்களுக்குள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களான மேல், தென், மத்திய, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் சப்பரகமுவ மாகாண முதலமைச்சர்களே மஹிந்தவைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நீடித்துவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருது குறித்தும் மஹிந்தவுடன், மாகாண முதலமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு நிபந்தனைகளை நிராகரிப்பு!
இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 6.1.1 மற்றும் 6.1.8 ஆகிய இரண்டு பரிந்துரைகளுக்கும் எவ்வாறானதொரு சூழ்நிலையிலும் இணங்க முடியாதென உறுதியாக மறுப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அவற்றை செயற்திட்டத்திலிருந்து நீக்கிவிடுவதற்கு தீர்மானித்துள்ளார்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் விசேட குழுவொன்றை ஜனாதிபதி நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது நியமித்துள்ளார்.
செயற்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் நேற்று- இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவிக்குமாறு ஜரோப்பிய ஒன்றியம் கோரியிருந்தது. எனினும் இலங்கை இன்னும் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஜனாதிபதி நியமித்த குழுவின் இறுதி முடிவுக்கமைய இணங்கக்கூடியவை மற்றும் இணங்கமுடியாதவை பற்றி ஜரோப்பிய ஒன்றியத்துக்கு தெளிவாக எழுத்து மூலம் அறிவிப்போம் என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.