2 லட்சம் அகதிகளை ஏற்க வேண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டுகோள்!
Published on September 5 2015
ஐரோப்பிய நாடுகள், 2 லட்சம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்' என, ஐ.நா., அகதிகள் மறுவாழ்வு ஆணையர் அந்தோனியோ குட்டரஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:அடைக்கலம் கோருவதற்கு தகுதியுள்ள அகதிகளுக்கு, அனைத்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளும், கண்டிப்பாக, அடைக்கலம் தர வேண்டும். தற்போது, 2 லட்சம் அகதிகளுக்கு, உடனடியாக மாற்று இடம் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது. ஏதோ சில அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதோடு, கடமை முடிந்து விட்டது என, ஐரோப்பிய நாடுகள் கருதக் கூடாது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.நேற்று, துருக்கி கடற்கரை மணலில், அகதி குழந்தை அய்லான் குர்தி, இறந்து கிடந்த படம், உலகையே அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியது.
இதையடுத்தே, அகதிகளை ஏற்க மறுக்கும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு, அந்தோனியோ குட்டரஸ், 'குட்டு' வைத்துள்ளார். ஜெர்மனி, 8 லட்சம் அகதிகளை ஏற்க முன்வந்துள்ளது. பிரான்சும், 'அகதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டத் தயார்' என, தெரிவித்துள்ளது. ஆனால், இங்கிலாந்து, ஹங்கேரி போன்ற சில நாடுகள், அகதிகளை ஏற்க தயங்குகின்றன. கடந்த, ஓராண்டில், இங்கிலாந்து, 240 அகதிகளுக்கு மட்டுமே, அடைக்கலம் கொடுத்துள்ளது. அகதிகளுக்கு, அனைத்து ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் பொருளாதார வலிமைக்கேற்ப, அடைக்கலம் கொடுக்க வேண்டியது அவசியம் என, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் வலியுறுத்தியுள்ளார். அண்மைய அகதிகள் பிரச்னையில், முதன் முதலாக ஆதரவுக் குரல் கொடுத்த, ஐரோப்பிய தலைவர், இவர் தான்.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
