நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஸ தரப்புக்கு ஆதரவாக அளிக்கப்படப் போவதில்லையென்று தெளிவாகியிருப்பதனால், தமிழ் மக்களின் வாக்குகள் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக பலம்பெற்றிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அரச தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவு எவ்வாறு அமையப் போகின்றது என அவரிடம் வினவப்பட்டதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

தமிழ் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தும். அதற்கான ஆதரவை தெரிவிக்கும் தரப்பினரிடம் எழுத்து மூலம் நாம் விருப்பம் பெற இம்முறை தீர்மானித்துள்ளோம்.

தெற்கின் நிலைமை தற்பொழுது மாறியுள்ளது என்றே நான் கருதுகின்றேன். வடக்கு மக்களின் உரிமைகளை வழங்கும் போது தெற்கில் மக்கள் குழப்பமடைவார்கள் என்ற சூழ்நிலை மாறியுள்ளது. ஏனெனில், அரசியல் யாப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு தெற்கு அனுமதியளித்தே இருந்தது. அதனை தெற்கு இப்போது தவறான ஒன்றாகப் பார்க்கப் போவதில்லை.

நாட்டிலுள்ள தற்போதைய சூழ்நிலையில் கறாராக இருந்து பேரம்பேசும் ஒரு அணுகுமுறையில் தமிழ் தரப்பு ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து எனவும் அவர் சுட்டிக்காட்டினார்